கோவைக்கு புறப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது தொழிலாளி, டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்


கோவைக்கு புறப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது தொழிலாளி, டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 5:21 PM GMT)

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு புறப்பட்ட 108 ஆம்புலன்சில் தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக சமையல் தொழிலாளி, டிரைவர் ஆகியோர் உயிர்தப்பினர்.

பொள்ளாச்சி,

ஆனைமலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் செந்தில்குமார் (வயது 40). இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமையல் வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே செந்தில்குமார் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.

பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கெண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கோலார்பட்டியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டது.

பின்னர் செந்தில்குமாரை ஆம்புலன்சில் ஏற்றி, அவருக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்கு சிலிண்டரை திறந்தனர். அப்போது திடீரென்று டிரைவரின் முன்பக்க இருக்கைக்கு அடியில் உள்ள பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதற்கிடையில் டிரைவரின் இருக்கை பகுதிகளில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு இருந்த செந்தில்குமாரை ஊழியர்கள் வேகமாக கீழே இறக்கினர். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவியை எடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஆம்புலன்சில் இருந்த மருந்துகள், ஊசிகள், பஞ்சு உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்தன. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் பழனியை சேர்ந்த பாரதிராஜ் என்பவருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து நோயாளி செந்தில்குமாரை வேறு ஆம்புலன்சில் டாக்டர்கள் கோவைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், சமையல் தொழிலாளி ஆகியோர் உயிர்தப்பினர்.

மேலும் பொதுமக்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆம்புலன்ஸ் தீப்பிடித்து டீசல் டேங்க் வெடித்து இருந்தால் உயிர்சேதமும் ஏற்பட்டு இருக்கும். ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரத்த வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த ரத்தங்கள் நாசமாகின. அதே பகுதியில் ஆம்புலன்சில் தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story