பொன்னேரியை தலைமையாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க - பொதுமக்கள் கோரிக்கை


பொன்னேரியை தலைமையாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை இரண்டாக பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீஞ்சூர்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் நுழைவு வாயிலாக விளங்கி வரும் திருவள்ளூர் மாவட்டம் 3,394 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக விளங்குகிறது. விவசாயம், மீன்பிடி தொழிலில் சிறப்பாக செயல் பட்டு வரும் இந்த மாவட்டத்தில் ஆரணியாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு ஆகிய ஆறுகள் பாய்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய 3 வருவாய் கோட்டங்களும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய 9 தாலுக்காக்களும் அமைந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், புழல், வில்லிவாக்கம், பூந்தமல்லி, எல்லாபுரம், பூண்டி, திருவள்ளூர், திருவலங்காடு, கடம்பத்தூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில், 526 கிராம ஊராட்சிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மாவட்டத்தில் உள்ளன.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆரணி, நாரவாரிகுப்பம், ஊத்துக்கோட்டை, திருநின்றவூர், திருமழிசை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆவடி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய பேரூராட்சிகள் கொண்டதாக விளங்குகிறது. நகரப்பகுதிகளில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 395 பேரும், கிராமப்பகுதிகளில் 12 லட்சத்து 99 ஆயிரத்து 709 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 37 லட்சத்து 28 ஆயிரத்து 104 பேரும் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வசித்து வருகின்றனர்.

பொதுமக்கள் பல்வேறு பணிக்காக 70 கி.மீ தூரத்தில் உள்ள மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நீதிமன்றங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என அனைத்தும் திருவள்ளூரில் தான் உள்ளது. பல்வேறு தேவைகளுக்காக இங்கு செல்ல வேண்டுமானால் பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணிக்க வேண்டும்

நீண்ட தூரம் அலைந்தாலும் உடனடியாக வேலை முடிந்தபாடில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியது உள்ளதால் இரவு நேரங்களில் அங்கு இருந்து குக்கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தங்களது வேலையை விட்டு இந்த பணியை முடிக்க வேண்டியது உள்ளதால், வருமான இழப்பும், மிகுந்த மன உளைச்சலுக்கும் பொதுமக்கள் ஆளாகின்றனர்.

இந்த மாவட்டம் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே நம்பியே உள்ளது. மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் எந்தவித வளர்ச்சியும் பெறாமல் உள்ளது. பின்தங்கிய நிலையில் இம்மாவட்ட மக்கள் வளர்ச்சி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகள், பின்தங்கிய சமுதாய மக்களின் வாழ்வில் ஏற்றம் காணவும், பொதுக்களின் அலைச்சலை குறைக்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குக்கிராமங்களுக்கும் எளிதாக சென்றடையும் வகையிலும் திருவள்ளூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து, பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story