நகைக்கடை அதிபர் தற்கொலை: ரூ.30 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் யார்? போலீசார் விசாரணை


நகைக்கடை அதிபர் தற்கொலை: ரூ.30 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Sept 2019 3:45 AM IST (Updated: 17 Sept 2019 11:41 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நகைக்கடை அதிபர் தற்கொலை விவகாரத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 48), நகைக்கடை அதிபர். இவர் காங்கிரஸ் பிரமுகராகவும் இருந்து வந்தார். நாகராஜன் செவ்வாய்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

தற்கொலை செய்த நாகராஜனும், அவரது நண்பரான திருச்சியை சேர்ந்த ஒருவரும் சேர்ந்தும் நகைக்கடை தொடங்கினர். இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் நகைச்சீட்டு போட்டு வந்தனர். பின்னர் முதிர்வு தொகை அடைந்ததும் அதற்கான நகையை வாடிக்கையாளர்களுக்கு அவர்களால் கொடுக்க முடியவில்லை. பணமும் இல்லாததால் அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் பங்குதாரர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் நகைக்கடையை தனது நண்பரிடம் நாகராஜன் கொடுத்துவிட்டார். மேலும் அவர் பங்குதாரர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் நாகராஜனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.

மேலும் அவர் பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story