திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி


திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தென்னூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி ஒருவர் பலியானார்.

மலைக்கோட்டை,

திருச்சி அரியமங்கலம் நேருஜிநகரை சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மகன் கார்த்திகேயன் (வயது29). இவர், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் தென்னூர் சிக்னல் அருகே வந்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து நின்றது. சிக்னல் விழுந்ததும் நேராக செல்வதற்கு கார்த்திகேயன் மோட்டார் சைக்கிளை எடுத்தார். அந்த வேளையில் லாரி இடதுபுறமாக திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பகுதி சக்கரத்தில் கார்த்திகேயன் சிக்கினார். இதில் லாரி, அவர் தலையில் ஏறி நசுக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உறவினர்கள் திரண்டனர்

இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்து சிக்னலில் என்ன நடந்தது? என்பதை அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும் எனவும் குரல் எழுப்பினர். இதனால், ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியய்யா வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டம் கெழவல்லி ராமலிங்கம் நகரை சேர்ந்த பெருமாள் (42) என்பவரை கைது செய்தார்.

Next Story