கும்பகோணத்தில், குடும்ப தகராறில் விபரீதம்: 2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசிய தொழிலாளி


கும்பகோணத்தில், குடும்ப தகராறில் விபரீதம்: 2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசிய தொழிலாளி
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி ஒருவர் தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசினார். இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்டது. மாயமான மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கும்பகோணம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 35). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு ஷோபனா(13), லாவண்யா(11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி(7), குணசேகரன்(5) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.

பாண்டிக்கும், அவருடைய மனைவி ரேணுகாதேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ரேணுகாதேவியின் சகோதரர் ஒருவர், குழந்தைகளை கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருக்கிறாயே என பாண்டியிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாண்டி மதுபோதையில் தனது மகள்கள் லாவண்யா, ஸ்ரீமதி ஆகியோரை அந்த பகுதியில் உள்ள அரசலாற்றில் தூக்கி வீசி உள்ளார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆற்றில் குதித்து லாவண்யாவை மட்டும் மீட்டு கரை சேர்த்தனர். இதனிடையே பாண்டி ஆற்றில் இருந்து வீட்டுக்கு சென்று மனைவி ரேணுகாதேவியிடம், தான் 2 குழந்தைகளை ஆற்றில் தூக்கி போட்டுவிட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகாதேவி கதறி அழுதபடி அக்கம் பக்கத்தினரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆற்றுக்கு ஓடிச்சென்று பார்த்தார். அப்போது லாவண்யா மட்டும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது தெரிய வந்தது.

இதனிடையே மதுபோதையில் குழந்தைகளை ஆற்றில் வீசிய பாண்டியின் ஈவு இரக்கம் அற்ற செயலால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மது போதையில் இருந்ததால் பாண்டி மாயமான தனது குழந்தை ஸ்ரீமதியை பற்றிய விவரங்களை போலீசாரிடம் தெளிவாக கூறவில்லை. இந்த நிலையில் குழந்தை ஸ்ரீமதியை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடினர். தேடும் பணி இரவு வரை நீடித்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் மகள்களை தந்தையே ஆற்றில் வீசிய விபரீத சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story