கடற்கரையில் புதைந்து கிடந்த 8 சிவலிங்கம் போலீசார் கைப்பற்றி அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்


கடற்கரையில் புதைந்து கிடந்த 8 சிவலிங்கம் போலீசார் கைப்பற்றி அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 7:52 PM GMT)

அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் 8 சிவலிங்கம் புதைந்த நிலையில் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரையில் மரத்தினால் ஆன ஒரு பொருள் மணலில் பாதி புதைந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்த மீனவர்கள் அதை எடுத்து பார்த்த போது மரத்தினால் செய்யப்பட்ட சிவலிங்கம் என்பது தெரியவந்தது. இதுபோல் அந்த பகுதியில் மேலும் 7 சிவலிங்கங்கள் புதைந்து கிடந்தன. அவை ஒவ்வொன்றும் சுமார் 1½ அடி உயரம் இருந்தது.

இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 8 சிவலிங்கங்களையும் கைப்பற்றி கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சிவலிங்கங்களை கடலில் போட்டது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்சுகிராமம் அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அங்கு மரத்தில் செய்யப்பட்ட 12 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகம் முடிந்த பின்பு அவை கடலில் போடப்பட்டது. அந்த சிவலிங்கங்கள்தான் கரை ஒதுங்கி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story