குடியாத்தம் அருகே, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து அசாம் வாலிபர் பலி


குடியாத்தம் அருகே, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து அசாம் வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 8:11 PM GMT)

படிக்கட்டில் அமர்ந்து ரெயிலில் பயணம் செய்த அசாம் வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார். அவரது கதி என்ன என்பதை அறிந்து மீட்பதற்காக உடன் சென்ற நண்பர்கள் தண்டவாளத்தையொட்டிய பாதையிலேயே பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தேடியுள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-

ஜோலார்பேட்டை,

அசாம் மாநிலம், பர்பெட்டா மாவட்டம் பாத்பார் பகுதியை சேர்ந்தவர் அட்வர்குமான். இவரது மகன் அஜில் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் அணில்அலி, அலிஆசான், ரகிம்உத்தின், அப்துல்கலாம் உள்ளிட்டோர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த இவர்கள் அனைவரும் கடந்த 13-ந் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தனர். ரெயில் சென்னை வழியாக காட்பாடியை கடந்து குடியாத்தத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் குடியாத்தம் ரெயில் நிலையம் வழியாக ரெயில் சென்றபோது படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த அஜிலுக்கு பிளாட்பாரம் உரசியதில் காலில் அடிபட்டது. இதில் ரத்தம் வழியவே படியில் அமர்ந்தவாறு அதனை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் ரெயில் அதிவேகமாக சென்ற நிலையில் நிலைதடுமாறிய அஜில், ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரது நண்பர்கள் அபாய சங்கிலியை இழுத்தனர். ஆனால் ரெயில் வேகமாக சென்றதால் நிற்கவில்லை. மீண்டும் அடுத்த பெட்டியில் இருந்த நண்பர்களுக்கு இவர்கள் செல்போன் மூலம் தகவல் அளிக்கவே அவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். அதன்பிறகு 3 கிலோமீட்டர் தூரத்தில் ரெயில் நின்றது. அதன்பிறகு நண்பர்கள் தேடிப் பார்த்தும் அஜில் கிடைக்கவில்லை.

மறுநாள் காட்பாடி ரெயில் நிலையம் வரை தண்டவாளத்தையொட்டிய பாதை வழியாக சென்று தேடி பார்த்தனர். ஆனால் அஜிலை பற்றிய தகவல் இல்லை. அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போய்விட்டதாக சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அவர்களது உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வளத்தூர்-குடியாத்தம் இடையே அஜிலின் உடலை தேடியவாறு வந்தனர். அப்போது இந்திராநகர் ரெயில்வே மேம்பாலம் அருகே முட்புதரில் அஜில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story