குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு உயர் அதிகாரிகள் வராததால் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்
திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு உயர் அதிகாரிகள் வராததால் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறை தீர்வு நாள் கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் மத்திய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சாரணியர் அலுவலகத்தில் நடைபெறும்.
இந்த நிலையில் 17-ந் தேதி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அங்கு வந்தனர்.
காலை 10 மணியளவில் தொடங்க வேண்டிய கூட்டத்திற்கு சுமார் 11.30 மணி வரையில் உதவி கலெக்டர் ஸ்ரீதேவி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் வர வில்லை. பின்னர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத் திறனாளிகள் சாரணியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மாற்றுத் திறனாளிகள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக சரிவர உயர் அதிகாரிகள் வருவதில்லை. எங்களிடம் கேட்கப்படும் குறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை. கண்துடைப்புக்காகவே இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதிகாரிகள் எங்களை புறக்கணிக்கின்றனர் என்று கோஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் இவர்களது போராட்டம் நீடித்தது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து கூட்டத்திற்கு சென்றனர்.
பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story