சென்னிமலை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


சென்னிமலை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2019 3:45 AM IST (Updated: 18 Sept 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள 1010 நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் 1010 நெசவாளர் பிரிவில் சென்னிமலை-ஈரோடு ரோட்டுக்கு காலை 10.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் அப்படியே நின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் அங்கு சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், 1010 நெசவாளர் காலனியில் வசிக்கும் எங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக 4 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் அரை மணி நேரம்தான் விழுகிறது.

இதனால் எங்களுக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதன்காரணமாக அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குறிப்பாக எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்மோட்டார்களும் பழுதடைந்து பயனற்ற வகையில் உள்ளது. எனவே எங்களுக்கு சீராக காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், மதியம் 12.30 மணி அளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த சாலைமறியல் போராட்டத்தினால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story