அ.ம.மு.க.வின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது: சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் - டி.டி.வி. தினகரன் பேட்டி
அ.ம.மு.க.வின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
கும்பகோணம்,
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.ம.மு.க.வின் செல்வாக்கு மேலும், மேலும் வளர்ந்து வருகிறது. காரணம், இந்த கட்சி தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இயக்கமாகும். யாரோ ஒரு சிலர் தங்கள் சுய நலத்திற்காக இந்த கட்சியை விட்டு வெளியேறுவதால் இந்த இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் இன்று மட்டுமல்ல என்றுமே ஏற்படாது. வருங்காலத்தில் அ.ம.மு.க., தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாகி சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
புகழேந்தியின் கருத்துக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அவர் அ.ம.மு.க.வில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தி மொழியை இந்தியா முழுவதும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அவர், அவருடைய கருத்தை கூறியுள்ளார். தமிழகத்தில் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த 1967-ம் ஆண்டு இருமொழி கொள்கையை அமல்படுத்தினார். தமிழகத்தில் யாரும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்தியை விரும்பி படித்தால் சரிதான். மாணவர்கள் விரும்பி படித்தால் யாரும் அதை தடுக்கப் போவதில்லை. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று திணிப்பதையே எதிர்க்கிறோம். மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு அ.தி.மு.க., அ.ம.மு.க. இடையேயான பிரச்சினை தீர்க்கப்படுமா என்று கேட்டதற்கு, யூகங்களுக்கு எல்லாம் பதில் கூறமுடியாது என்றார்.
Related Tags :
Next Story