தரம் உயர்த்தக்கோரி முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்


தரம் உயர்த்தக்கோரி முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2019 9:30 PM GMT (Updated: 17 Sep 2019 8:52 PM GMT)

தரம் உயர்த்தக்கோரி முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும், திருவாரூர்- காரைக்குடி ரெயில் சேவையை சென்னை முதல் காரைக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக அனைத்து அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முத்துப்பேட்டை ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரெயில் நிலையம் உள்ளே செல்ல அனுமதிக்காமல் ரெயில்வே போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டனர். பேரணி மன்னார்குடி சாலை, குமரன் பஜார், பழைய பஸ் நிலையம் வழியாக முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், வர்த்தக கழக தலைவர் மெட்ரோ மாலிக், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர் சந்திரசேகர ஆசாத், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story