திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் வடிகால் வசதி இல்லாததால், சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்


திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் வடிகால் வசதி இல்லாததால், சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 8:52 PM GMT)

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் வடிகால் வசதியில்லாததால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மின் விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருத்துறைப்பூண்டி நகராட்சி. இந்த நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு பஸ் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் போன்றவை உள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சி ஆக இது விளங்கி வருகிறது. இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் வசதி சரிவர செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள வாய்க்கால்களும் சிதிலமடைந்த சாக்கடை நீர் தேங்கி வடிவதற்கு வழி இல்லாத நிலையில்தான் காணப்படுகின்றன. பல இடங்களில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இது ஒருபுறமிருக்க தற்போது மழை பெய்து வருவதால் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல காணப்படுகின்றன. இந்த மழை நீர் வடிவதற்கு வழியில்லாத நிலையில் சாலைகள் மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றன.

திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் சாலையில் உள்ளது ஆஸ்பத்திரி தெரு. இந்த தெருவில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன மேலும் இதன் அருகில் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள், அரசு அலுவலகம் ஆகியவையும் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த சாலையில் ஓரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி குளம் போல் காணப்படுகின்றது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்று வருகின்றன. மழைநீர் தேங்கி காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு சொல்வோர், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். சில நேரங்களில் மாணவ, மாணவிகள் தேங்கி கிடக்கும் மழை நீரில் விழுந்து விடும் அபாயமும் உள்ளன.

இதேபோல் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பல்வேறு தெருக்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி வடிவதற்கு வழி இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த பகுதிகள் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் மழைநீர் வடிவதில் சிரமமான நிலை தான் காணப்படுகின்றன.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகர வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் கூறுகையில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கமிஷனர் நியமிக்கப்படவில்லை. செயற்பொறியாளர் இல்லை. மேலும் பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் நகராட்சிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. வடிவதற்கு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இது களிமண் நிறைந்த பகுதி ஆதலால் மழை தண்ணீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. நீர் எளிதில் உறிஞ்சப்படாததால் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது. எனவே அனைத்து பகுதியிலும் சாக்கடை வாய்க்கால்களை சுத்தம் செய்து மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. ஆனால் பல தெருக்களில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இது குறித்தும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க தொடர்பு கொண்டால் அவர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்பதால் அதற்குள் நகராட்சியில் காலிப்பணியிடங்களை நிரப்பி மழைநீர் தேங்காமல், தொற்றுநோய் போன்றவை பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story