தருமத்துப்பட்டி-ஆடலூர் இடையே மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம்


தருமத்துப்பட்டி-ஆடலூர் இடையே மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 8:55 PM GMT)

தருமத்துப்பட்டி-ஆடலூர் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, சோலைக்காடு, அமைதிசோலை, அழகுமடை, ரெட்டப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. ஏலக்காய், காபி, எலுமிச்சை, சவ்சவ், ஆரஞ்சு, வாழை, அவரைக்காய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த விளை பொருட்களை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதற்காக தருமத்துப்பட்டியில் இருந்து ஆடலூருக்கு மலைப்பாதை உள்ளது. 24 கி.மீ. தூரமுள்ள இந்த மலைப்பாதையில் 24 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இதில் 6-வது கொண்டை ஊசி வளைவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது. சாலையில் பாதியளவு அரித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முடங்கியது.

தடுப்புச்சுவர்

இதையடுத்து மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக வாகனங்கள் சென்று வரும் வரையில் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும் மணல் மூட்டைகள் ஒவ்வொன்றாக விழுந்து வருகிறது.

இதனால் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த இடத்தை ஒரு வித அச்சத்துடனேயே வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story