திட்டக்குடி அருகே, சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
திட்டக்குடி அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சாலை வழியாக ஆதமங்கலம், வையங்குடி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். ஆனால் இந்த சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது, மேலூரில் மட்டும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், சாலையை சீரமைக்கவில்லை.
இந்த நிலையில் கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையை சீரமைக்க வேண்டும், தெரு மின் விளக்குகளை சரிசெய்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் தாங்களாகவே கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story