கோவண்டியில் டியூசன் ஆசிரியை குத்திக்கொலை 12 வயது சிறுவன் வெறிச்செயல்


கோவண்டியில் டியூசன் ஆசிரியை குத்திக்கொலை 12 வயது சிறுவன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 17 Sep 2019 9:38 PM GMT (Updated: 17 Sep 2019 9:38 PM GMT)

கோவண்டியில் டியூசன் ஆசிரியையை அவரிடம் படித்த 12 வயது சிறுவன் குத்திக்கொன்றான்.

மும்பை,

மும்பை கோவண்டியை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லம் (வயது30). இவர் டியூசன் வகுப்பு நடத்தி வந்தார். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் டியூசன் படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை சிறுவனின் தாய் வீட்டுக்கு தேவையான சில பொருட்கள் வாங்குவதற்காக டியூசன் ஆசிரியை ஆயிஷா அஸ்லமிடம் பணம் கடன்கேட்டு உள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி கடன் கொடுக்க மறுத்தார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்த சிறுவனும் அங்கு நின்று கொண்டிருந்தான். தாயிடம் ஆயிஷா அஸ்லம் சண்டையிடுவதை பார்த்து சிறுவன் கடும் ஆத்திரம் அடைந்தான்.

இதனால் வீட்டுக்குச் சென்ற சிறுவன் கத்தியை எடுத்து வந்து டியூசன் ஆசிரியை என்றும் பாராமல் ஆயிஷா அஸ்லமை சரமாரியாக குத்தினான். இதில் படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆயிஷா அஸ்லமை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சிவாஜி நகர் போலீசார் ஆயிஷா அஸ்லமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story