கிரயம் செய்து தரக்கோரி கோவில் நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்


கிரயம் செய்து தரக்கோரி கோவில் நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:30 AM IST (Updated: 18 Sept 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் அந்த நிலத்தை தங்களுக்கு கிரயம் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கோவில்கள், மடங்கள், தேவாலயம், வக்புவாரியம் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆகியோருக்கு அந்த இடங்களை நியாயமான விலையை தீர்மானித்து, அதை தவணை முறையில் பெற்றுக்கொண்டு அவர்களுக்கே கிரயம் செய்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர்கள் குமார், பஞ்சலிங்கம், துணைசெயலாளர் வெங்கடாசலம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு, சாகுபடி செய்வோருக்கு சந்தை மதிப்பின்படி வாடகை, குத்தகை தீர்மானிப்பதை கைவிட வேண்டும். 100 முதல் 500 மடங்கு வாடகை உயர்த்தி உள்ளதை ரத்து செய்ய வேண்டும். வாடகை செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றுவது. கடைகளுக்கு சீல் வைப்பது. ஏலம் விடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முறையான ஆவணங்கள் வைத்து பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலத்தை கிரயம் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையை முற்றிலும் சீரழித்து அதன் கீழ் உள்ள கோவில் மற்றும் சொத்துக்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை முறியடிப்போம் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்த சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேசிடம் கொடுக்க சென்றனர். அவர் அலுவலக பணிக்காக வெளியில் சென்று விட்டதால், அவரது உதவியாளரிடம் மனுவை கொடுத்து விட்டு சென்றனர்.

Next Story