திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகளை கண்டித்து தடையை மீறி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகளை கண்டித்து தடையை மீறி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 10:51 PM GMT)

இந்து முன்னணி நிர்வாகிகளை கண்டித்து திருப்பூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடுவதற்காக எலெக்ட்ரிக் கடையில் இருந்த தம்பதியிடம் இந்து அமைப்பினர் பணம் கேட்டபோது அவர்கள், கொடுக்காததால் அந்த தம்பதியை தாக்கிய இந்து அமைப்பு நிர்வாகிகளை கண்டித்து போலீசாரின் தடையை மீறி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த 5-ந் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்குள் இந்து முன்னணி நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த தொழிலாளர்களை தாக்கி, நிறுவனத்தையும் சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்து முன்னணி நிர்வாகிகளை கண்டித்தும் தி.மு.க., சார்பில் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அறிவித்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் குவிந்தனர். அதை தொடர்ந்து தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, ம.தி.மு.க. சம்பம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்து முன்னணி நிர்வாகிகளை கண்டித்தும் கோஷமிட்டனர். இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், உடனே ஆர்ப்பாட்டத்தை கைவிடுங்கள் என்றும் போலீசார் கூறியதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது எனக்கூறி கட்சியினர் போராட்டத்தை நிறைவு செய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story