சட்ட விரோதமாக சிவகாசி சிவானந்தாநகர் பகுதியில் குடிநீர் விற்பனை - யூனியன் அதிகாரியிடம் புகார்


சட்ட விரோதமாக சிவகாசி சிவானந்தாநகர் பகுதியில் குடிநீர் விற்பனை - யூனியன் அதிகாரியிடம் புகார்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:45 AM IST (Updated: 18 Sept 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி சிவானந்தாநகர் பகுதியில் சட்ட விரோதமாக நடைபெறும் குடிநீர் விற்பனையை தடுக்கக்கோரி யூனியன் அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.சிவகாசி சிவானந்தாநகர் பகுதியில் சட்ட விரோதமாக நடைபெறும் குடிநீர் விற்பனையை தடுக்கக்கோரி யூனியன் அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துக்களிலும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்தபிரச்சினையை சமாளிக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பல இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அடிபம்பு வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவானந்தாநகர் பகுதியில் சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து சட்ட விரோதமாக குடிநீர் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதை தடுக்க கோரி நேற்று சிவானந்தாநகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு வந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

சிவகாசி நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் பல இடங்களில் சட்டவிரோதமாக குடிநீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சிவகாசி பகுதியில் நீர்மட்டம் 500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால் பல ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. இதை பயன்படுத்தி சிலர் தண்ணீர் உள்ள பல பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்களும் விலை கொடுத்தாவது தண்ணீரை வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் தண்ணீர் விற்பனையை நிரந்தமாக்கி வருகிறார்கள். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story