குறைதீர்வு கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால் பூமாலை, கற்பூர ஆரத்தியுடன் விவசாயிகள் நூதன போராட்டம்


குறைதீர்வு கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால் பூமாலை, கற்பூர ஆரத்தியுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:45 AM IST (Updated: 18 Sept 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் அதனை கண்டித்து விவசாயிகள் பூமாலை, கற்பூர ஆரத்தியுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட இந்த கூட்டம் 2 வாரங்கள் கழித்து 17-ந் தேதி செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக வந்திருந்தனர்.

கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியிருக்க வேண் டும். ஆனால் 11 மணி வரை பெரும்பாலான அதிகாரிகள் வரவில்லை. வழக்கமாக இந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமை தாங்குவார். ஆனால் நேற்று அவரும் வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பூ மாலை, வெற்றிலை பாக்கு, கற்பூர ஆரத்தியுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கூட்டத்திற்கு வராத வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கூட்டரங்கம் முன்பு அமர்ந்து இருந்தனர்.

தகவலறிந்த திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குறைதீர்வு கூட்டம் உடனடியாக நடத்தப்படும் என அறிவித்தார். இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தாசில்தார் அமுல் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர்கள் அன்பழகன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது விவசாயி ஒருவர், “குறைதீர்வு கூட்டம் பெயரளவில் நடைபெறுகிறது. விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. ஜமாபந்தியில் அளித்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. உயர் அதிகாரிகள் கலந்து கொண்டால் தான் இந்த கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை இருக்கும்” என்று ஆவேசமாக பேசினார்.

கோபமடைந்த தாசில்தார் அமுல், அதிகாரிகளை மிரட்டும் வகையில் யாரும் பேசக் கூடாது. குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தால் உங்கள் கோரிக்கைகளை எங்களிடம் கூறுங்கள். இல்லையென்றால் மனு அளியுங்கள் என்று சத்தமாக பேசினார்.

இதனால் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தொடர்ந்து பரபரப்பாக காணப்பட்டது.

Next Story