விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கோவையில் சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகள் - 34 பேர் கைது


விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கோவையில் சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகள் - 34 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சட்ட நகலை எரிக்க முயன்ற 34 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

கோவை, 

கோவை மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயர் மின் கோபுரம் அமைக்க நில அளவீடு செய்ய வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1,885-ம் ஆண்டு விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்டநகலை எரிக்கும் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் தங்கராஜ், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில், 1,885-ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்ட சட்ட நகலை எரிப்பதற்காக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் திரண்டனர்.

அவர்கள் சட்டநகலை கிழித்து எறிந்து தீவைக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story