திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:30 PM GMT (Updated: 18 Sep 2019 5:58 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக வாட்ஸ்- அப் குரூப் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டு புதுநகர் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகளுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வேற்காட்டில் நடைபெற்றது.

இதற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னேரி பவன் குமார் ரெட்டி, ஊத்துக்கோட்டை சந்திர தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பேசியதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ஆகும். போலீசாருக்கும், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறைந்து விட்டது. பல்வேறு வகைகளில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அதனை ஆரம்ப கால கட்டத்திலேயே உடனடியாக தங்களது எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரிவித்து அதற்குரிய தீர்வை காண வேண்டும். அதனை அப்படியே விட்டு விட்டு பெரிய பிரச்சினையாக உருவெடுத்த பின்பு அதனை எதிர் நோக்கும் சூழல் இருக்க கூடாது என்பதற்காக இத்தகைய கூட்டம் நடத்தப்படுகிறது.

தொழிற்சாலைகளில் வெளிமாநில ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து தொழிற்சாலையின் பாதுகாப்புக்கு ஆட்களை வைக்கும் போது அந்த பாதுகாப்பு நிறுவனம் உரிய அனுமதியுடன் செயல்படும் நிறுவனம் தானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் உள்ளேயும், அதன் வெளிபுறங்களையும், அருகே உள்ள சாலை திருப்பங்களையும் பதிவு செய்திடும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைக்குள் வரும் வாகனங்களின் பதிவு எண் நன்கு பதிவாகும்படி கேமராக்கள் அமைத்திட வேண்டும்.

மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வரும் ஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்துதான் தொழிற்சாலையின் உள்ளே வர வேண்டும் என தெரிவித்தால் அவர்கள் அதனை பின்பற்றுவார்கள். இது தவிர சாலை பாதுகாப்பு குறித்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு விளக்கமாக எடுத்து கூற வேண்டும் என்றாலும், போக்குவரத்து போலீசாரை கொண்டு அதற்கான சிறப்பு வகுப்புகளை நடத்திடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் அந்த அந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக வாட்ஸ்-அப் குரூப் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறக்காவல் நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டை அவர் ஆய்வு செய்தார்.

Next Story