நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என புகார் கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா பெங்களூரு விதான சவுதாவில் நடந்தது


நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என புகார் கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா பெங்களூரு விதான சவுதாவில் நடந்தது
x
தினத்தந்தி 19 Sept 2019 3:30 AM IST (Updated: 19 Sept 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சரியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி கர்நாடக அரசை கண்டித்து பெங்களூரு விதான சவுதாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நிவாரண பணிகளின் நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரங்கள் வருமாறு:-

கர்நாடகத்தில் வெள்ளம் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண பணிகளை விரைவுபடுத்த கோரி மண்டலம் வாரியாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தர்ணா போராட்டம்

வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பாதித்த தாலுகாக்களை உடனே மாநில அரசு அறிவிக்க வேண்டும். டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ.வை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம். இந்த நேரத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக நிற்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சரியான முறையில் நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்று கூறி மாநில பா.ஜனதா அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் விதான சவுதா வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்களின் கைகளில் மாநில அரசை விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

மறுவாழ்வு வசதிகள்

போராட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பல பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, சேதங்கள் உண்டாகியுள்ளன. 90 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. மாநில அரசும் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டப்படும் வரை தற்காலிகமாக கூடாரம் அமைத்து கொடுப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இதுவரை அந்த கூடாரம் அமைக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த உதவியும் கிடைக்காமல் நிற்கதியாய் இருக்கிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை முழுவீச்சில் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் இன்னும் தீவிரமாக போராட்டம் நடத்தும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story