சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது: டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீது இன்றும் விசாரணை டெல்லி சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது: டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீது இன்றும் விசாரணை டெல்லி சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறும் என்று டெல்லி சிறப்பு கோர்ட்டு அறிவித்தது.

பெங்களூரு,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கடந்த 3-ந் தேதி கைது செய்து, 4-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்காக டி.கே.சிவக்குமாரை 9 நாட்கள் அதாவது 13-ந் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலுக்கு அனுப்பி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பிறகு கடந்த 13-ந் தேதி டி.கே.சிவக்குமாரை ஆஜர்படுத்திய அமலாக்கத்துறையினர், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்குமாறு கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட டெல்லி சிறப்பு கோர்ட்டு, டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட அமலாக்கத்துறையின் காவலை மேலும் 4 நாட்கள், அதாவது கடந்த 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் காவல் முடிவடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிவடைந்துவிட்டதால் அவரை நீதிமன்ற காவலில் வைக்க சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது. ஆனால் டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல்கள், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டி.கே.சிவக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறையில் அடைப்பதற்கு முன்பு அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டி.கே.சிவக்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோர்ட்டுக்கு வரவில்லை

அதன்படி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அவரது ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், “டி.கே.சிவக்குமார் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ.800 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட சொத்தை சட்டவிரோதம் என்று எப்படி கூற முடியும்?. டி.கே.சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். அந்த சமுதாயம் பிரதானமாக விவசாயம் செய்கிறது. விவசாயத்தில் இருந்து அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது“ என்றார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், கோர்ட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அவரிடம் பணியாற்றும் இளம் வக்கீல் எடுத்துக்கூறி, விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதாவது அவரது ஜாமீன் மனு மீது இன்றும் (வியாழக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

ரத்த அழுத்தம்

இதற்கிடையே டி.கே.சிவக்குமாருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராததால், அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீரான பிறகு திகார் சிறைக்கு அனுப்பப்படுவார்.

Next Story