வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது


வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 19 Sept 2019 5:00 AM IST (Updated: 19 Sept 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது.

இதை உண்மை என்று நம்பி ஏராளமான இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வேலை கேட்டு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த இளைஞர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் பணம் வசூலித்ததோடு, குறிப்பிட்ட இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்து கொண்டனர்.

வேலை கேட்டு விண்ணப்பித்து பணமும் கொடுத்த இளைஞர்களுக்கு வேலைக்கான போலி உத்தரவு நகல்களை வழங்கி, அந்த நிறுவனம் மோசடி லீலையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதோடு அலுவலகத்தையும் மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. வேலை கேட்டு விண்ணப்பித்த இளைஞர்களிடம் ரூ.25 லட்சத்தையும் வாங்கிக்கொண்டு, பாஸ்போர்ட்டையும் திருப்பி கொடுக்கவில்லை.

இந்த நிறுவனத்தால் மோசம்போன அப்பாவி இளைஞர்கள் 80 பேர் சென்னை ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்திய நிரூபன் சக்ரவர்த்தி (வயது 26) என்பவர் மீதும், நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்த அருணா (25) மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில், நிரூபன் சக்ரவர்த்தி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. அருணா சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அருணா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான நிரூபன் சக்ரவர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story