தியாகதுருகத்தில், 3 பெண்களிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பணம் அபேஸ் செய்த வாலிபர் கைது


தியாகதுருகத்தில், 3 பெண்களிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பணம் அபேஸ் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 7:32 PM GMT)

தியாகதுருகத்தில் 3 பெண்களிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பணத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தியாகதுருகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும், திடீரென அங்கிருந்து ஓடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் கொண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்த் (வயது 29) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தியாகதுருகம் அருகே குன்னியூரை சேர்ந்த ஜெயக்கோபு மனைவி சுமதி(37), வடபூண்டியை சேர்ந்த ஜெயராமன் மனைவி சுகந்தி(37), தியாகதுருகம் சக்திநகர் வேல்முருகன் மனைவி செந்தாமரை(55) ஆகியோர் தியாகதுருகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்த போது, அவர்களுக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து அவர்களிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். பின்னர் 3 பேரின் ஏ.டி.எம். கார்டையும் பயன்படுத்தி மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 800 ரூபாயை அபேஸ் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மற்றும் 6 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சுமதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி என்பதும், சுகந்தி அரசு பள்ளி ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story