பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தமிழ் மாநில தேசிய அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் மாநில தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் வரதராஜூ, பழனிவேல்ராஜன், லீலாவதி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்கிற பெயரில் மத்திய தொழில் ரீதியான பாதுகாப்பு, பணிநிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு உள்பட அனைத்து தொகுப்பு மசோதாக்களை திரும்பபெற வேண்டும். நலவாரியங்கள் கலைக்கப்படுவதையும், அதன் செயல்பாடுகள் தனியார்மயமாக்குவதையும் கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கப்பட வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தேங்கியுள்ள விண்ணப்பங்களுக்கு உடனே உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

கையெழுத்து இயக்கம்

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஹிந்த் மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்.) தமிழ் மாநிலக்குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாநில தலைவர் திருப்பதி, மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பிரமணி மற்றும் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story