மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளாத மாநில அரசை கண்டித்து பெலகாவியில் 24-ந் தேதி போராட்டம் சித்தராமையா தகவல்
மழை வெள்ள நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளாமல் இருக்கும் மாநில அரசை கண்டித்து பெலகாவியில் வருகிற 24-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா, காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்காலிக கூடாரங்கள்
கர்நாடகத்தில் 22 மாவட்டங்களில் உள்ள 103 தாலுகாக்களில் மழைவெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டாகியுள்ளன. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தினோம். ஆனால் அங்கு நிவாரண பணிகள் சரியான முறையில் நடைபெறவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு மட்டும் தலா ரூ.10 ஆயிரம் அரசு வழங்கியுள்ளது. வேறு எந்த உதவியும் மாநில அரசு செய்யவில்லை. சில பகுதிகளில் அரசு பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்த பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கவில்லை. வீடுகளை இழந்த மக்களின் வசதிக்காக தற்காலிக கூடாரங்கள் அமைப்பதாக அரசு சொன்னது. ஆனால் கூடாரங்கள் அமைக்கப்படவில்லை.
மக்கள் படும் துன்பங்கள்
அந்த பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. கால்நடைகள் தீவனம் இல்லாமல் அவதிப்படுகின்றன. வீடுகளை இழந்த மக்கள் இப்போது கூட சாலையோரம் வசிக்கிறார்கள். அந்த பகுதிகளில் நான் நேரில் சென்று பார்க்கும்போது, மக்கள் படும் துன்பங்களை கண்டேன். பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் கிராமத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் பார்க்கவில்லை. மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் நிதி உதவியை பெறுவதில் மாநில அரசு மவுனம் வகிக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை சேர்ந்த 25 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களும் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியை பெறுவது பற்றி பேசாமல் உள்ளனர். இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
வாய் திறக்கவில்லை
சமீபத்தில் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு குறித்து வாய் திறக்கவில்லை. வெள்ள பாதிப்புகள் ஒருபுறமிருக்க, மாநிலத்தில் 53 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. ஆயினும் வறட்சி பாதித்த பகுதிகளை மாநில அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
வெள்ள நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளாமல் இருக்கும் மாநில அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி பெலகாவியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story