நாகர்கோவில் அருகே விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர் 2 குழந்தைகளுடன் தாய் உயிர் தப்பினார்


நாகர்கோவில் அருகே விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர் 2 குழந்தைகளுடன் தாய் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 8:30 PM GMT)

நாகர்கோவில் அருகே லாரிக்கு அடியில் ஸ்கூட்டர் சிக்கி கொண்ட விபத்தில், 2 குழந்தைகளுடன் தாய் உயிர் தப்பினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் அன்புநகரை சேர்ந்தவர் டெல்வி. இவர் நேற்று காலை தன் 2 குழந்தைகளையும் ஸ்கூட்டரில் வெளியே அழைத்து சென்றார். 4 வழிச்சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் வந்தபோது அங்கு நின்ற ஒரு லாரி திடீரென பின்னோக்கி இயக்கப்பட்டது. இதை டெல்வி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஸ்கூட்டரை நிறுத்துவதற்குள் ஸ்கூட்டர் மீது லாரி மோதி விட்டது. இந்த விபத்தில் லாரியின் அடியில் ஸ்கூட்டர் சிக்கி கொண்டது.

இதற்கிடையே ஸ்கூட்டர் மீது லாரி மோதப்போவதை அறிந்து சுதாரித்துக் கொண்ட டெல்வி தன் 2 குழந்தைகளுடன் ரோட்டில் குதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். எனினும் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது அவர்கள், 4 வழிச்சாலை பணிக்காக தினமும் ஏராளமான லாரிகள் அங்கு நிறுத்தப்படுவதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் லாரிகளை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story