5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு - ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு - ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 9:41 PM GMT)

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, 

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்கள்.

இந்த நிலையில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அந்தியூர் செல்வராஜ், கந்தசாமி, சச்சிதானந்தம், சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நானும் ஆசிரியராக பணியாற்றி உள்ளேன். எனவே 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்பை உணர முடிகிறது. கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்படும். பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறி உள்ளது. ஆனால் இந்த தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”, என்றார். இதில் கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், துணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் திருவாசகம், நிர்வாகி கேபிள் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story