விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சேலத்தில் சட்டநகலை எரித்து விவசாயிகள் போராட்டம்


விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சேலத்தில் சட்டநகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2019 3:30 AM IST (Updated: 19 Sept 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம், நாமக்கல், கோவை உள்பட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சேலம் மாவட்டம் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சட்டநகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டெல்லிபாபு கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டனர். அவர்கள், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் நில உரிமையை பாதிக்கும் 1885-ம் ஆண்டின் சட்டத்தை கைவிடக்கோரியும் கோஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சட்ட நகலை தீ வைத்து எரித்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லிபாபு உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்தனர்.

முன்னதாக இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லிபாபு கூறும் போது, ‘விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மின்கோபுரங்கள் அமைக்க கூடாது. மின் கம்பிகளை கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளின் நில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Next Story