தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்


தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:30 PM GMT (Updated: 18 Sep 2019 9:43 PM GMT)

தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

பனமரத்துப்பட்டி, 

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத ஜவ்வரிசி தமிழகத்தில் உள்ள ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

மரவள்ளிக்கிழங்கு பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்வதில் கேரள மாநிலம் முதலிடம் வகித்தாலும், மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிப்பில் நாட்டின் தேவையில் 80 சதவீதத்தை நிறைவு செய்வதில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

இந்தநிலையில் வடமாநிலங்களுக்கு ஜவ்வரிசி அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், தமிழகத்தில் பொதுமக்களிடம் ஜவ்வரிசியின் பயன்பாடு சற்று குறைவாகவே உள்ளது.

எனவே தமிழகத்திலும் ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க செய்திட, ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கமும் கோரிக்கை வைத்தது.

இதையடுத்து தீபாவளி பண்டிகை முதல், ரேஷன்கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, சேலம் சேகோசர்வ் அலுவலகத்தில் தலைவர் தமிழ்மணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரேஷன்கடைகளுக்கு ஜவ்வரிசி வினியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் தமிழ்மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

மதர்சேகோ என்ற திட்டத்தின் அடிப்படையில் ரேஷன்கடைகளில் ஜவ்வரிசி வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தொடங்கி வைக்கிறார். மாவட்ட வாரியாக எவ்வளவு ஜவ்வரிசி தேவை என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் ஜவ்வரிசி மூலம் என்னென்ன உணவு தயார் செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாகனம் ஒன்று மாநிலம் முழுவதும் சுற்றி வர உள்ளது. விரைவில் அந்த வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மரவள்ளிக்கிழங்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சேகோ சர்வ் நிர்வாகமே கொள்முதல் செய்து ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story