ரூ.80 லட்சத்தில் குடிமராமத்து பணி: தென்கால் கண்மாயை ஆழப்படுத்தாமல் கரையை மட்டும் உயர்த்துவதால் பயன் இல்லை - விவசாயிகள் புகார்


ரூ.80 லட்சத்தில் குடிமராமத்து பணி: தென்கால் கண்மாயை ஆழப்படுத்தாமல் கரையை மட்டும் உயர்த்துவதால் பயன் இல்லை - விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 9:58 PM GMT)

தென்கால் கண்மாயில் ரூ.80 லட்சத்தில் குடி மராமத்து பணியில் கண்மாயை ஆழப்படுத்தாமல் கரையை மட்டும் உயர்த்துவதால் பயன் இல்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் விவசாயிகளின் முதுகெலும்பாக தென்கால் கண்மாய் அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் உள்ள ஷட்டர் வழியே நிலையூர் கால்வாய் வழியாக உபரி தண்ணீர் இந்த கண்மாய்க்கு வந்து சேரும். மேலும் கனமழை பெய்தால் கண்மாய் நிரம்பும்.

இந்த இரண்டு நிலைப்பாடும் இல்லை என்றால் கண்மாய் மட்டுமல்லாது விளைநிலமும் பாலைவனமாகவே மாறி விடும். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பருவமழை பொய்த்ததாலும் வைகை அணையில் இருந்து உபரி தண்ணீர் கிடைக்கப்பெறாததாலும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் 500 ஏக்கராக சுருங்கி விட்டன. கண்மாய் நிரம்பாததால் 500 ஏக்கர் நிலங்கள் வீட்டு மனையாக மாறி குடியிருப்புகளாக உருவாகிவிட்டன. மேலும் இதே நிலை தொடர்ந்துநீடித்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் திருப்பரங்குன்றத்தில் விவசாய நிலங்கள், விவசாயிகள் இல்லாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.80 லட்சத்தில் குடிமராமத்து பணி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரியமடை பகுதி ஓரத்தில் மண்ணை அள்ளி கரைகள் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக விவசாய சங்க தலைவர் மகேந்திரன் கூறியதாவது:-

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூத மடை என்று சொல்லக்கூடிய பெரிய மடை பழுதாகி தண்ணீர் வீணாக கசிந்து வெளியேறியது. குடி மராமத்து பணியால் சேதமடைந்த பூத மடையை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு கான்கிரீட் மூலம் வலுவான புதிய மடை அமைக்கப்படுகிறது. நிலையூர் கால்வாய் பகுதியை அருகே உள்ள விளாச்சேரி மதகில் இருந்து தென்கால் கண்மாய்க்கு வைகை உபரி தண்ணீர் வரக்கூடிய வரத்துக்கால்வாய் 5 மீட்டர் அகலத்திற்கு சீரமைக்கப்படுகிறது. கண்மாய் உள்பகுதியில் இருந்து மண் எடுத்து கண்மாய்க்கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு வாய்க்கால் மற்றும் கால்வாய் சீரமைக்கப்படுகிறது. கண்மாயின் உள்பகுதியில் ஏற்கனவே ஆழமாக மண் அள்ளப்பட்டு மேடு பள்ளமாக இருந்த பகுதிகள் சமமாக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆயிரம் ஏக்கர் என்று இருந்த விவசாய நிலங்கள் தற்போது வீட்டு மனையாக உருவாகி குடியிருப்புகளாக மாறி 500 ஏக்கராக சுருங்கி கொண்டிருக்கும் வேளையில் தண்ணீர் தேங்குவதற்காக குடிமராமத்து பணியில் கண்மாய் உள்பகுதியில் ஆழப்படுத்தாமல் கண்மாய்க்கரை மட்டும் உயர்த்துவதால் பயன் இல்லை. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தென்கால் கண்மாய்க்கு நிரந்தரமாக பாசனத்திற்கு என்று முறையாக முறைபாசன தண்ணீர் திறக்கப்பட வேண்டும். தென்கால் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக குடியிருப்பு பகுதியில் உள்ள வரத்துக்கால்வாய் முழுவதுமாக ஒரே சீராக சீரமைக்கப்பட வேண்டும். கண்மாயின் உள்பகுதி மையப்பகுதியில் பெரிய குளம் அமைத்து அதில் நாலாபுறமும் தடுப்புகள் அமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.

கண்மாய்க்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வருங்காலங்களில் மீன்பிடி குத்தகை ஏலம் தவிர்க்கப்பட வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கி மாபெரும் திட்டமாக தென்கால் கண்மாய் முழுவதும் தூர்வாரப்பட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பொழுதுபோக்கு அம்சம் உருவாகும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு வருமானம் பெருகுவதோடு நீர்நிலை மற்றும் விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும், வேலைவாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story