தூத்துக்குடியில், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, மழைநேரத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மழைக்காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் தடுப்பது மற்றும் திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி விழா மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற பிரச்சினை குறித்து கல்வித் துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த போராட்டத்தை ரத்து செய்திருப்பது எதிர்பார்த்ததுதான். தமிழக முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக விளக்கம் அளித்து உள்ளார். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டியது மட்டும்தான் பாக்கி. அதை ஸ்டாலின் செய்வாரா?.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 1980-ம் ஆண்டு தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே போன்று தற்போதைய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டால் நிச்சயம் தோல்வியை பெறுவார். கேந்திர வித்யாலயம் பள்ளிகளில் தங்களுக்கான அனுமதி சீட்டு(கோட்டா) வேண்டாம் என தி.மு.க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதுவரை சொல்லவில்லை. இதன் மூலம் மறைமுகமாக இந்தியை படிக்க ஊக்குவித்தவர்கள் தி.மு.க. வினர்தான்.மேலும் தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக ஒரு கொள்கையை முதல்-அமைச்சர் வெளியிட்டு உள்ளார். அதன்படி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசு தனித்தன்மையோடு இருக்கும். மக்களை பாதிக்கும் எந்த அம்சத்தையும் அரசு ஏற்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story