நெல்லையில் வாகன சோதனையில் பரபரப்பு: ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது - தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நெல்லையில் போலீசாரின் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது. இதுதொடர்பாக தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞர் அணி தலைவராக உள்ளார். கண்ணபிரான் நேற்று முன்தினம் இரவு தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது கோவில்பட்டி போலீசார் அவர்களது காரை மறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நெல்லை அருகே உள்ள துறையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரில் கன்னியாகுமரி சென்று கொண்டு இருந்தார். அவரது காரையும் கட்சி நிர்வாகிகள் மறித்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகிகளை நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே, நெல்லை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணபிரானுடன் வந்த மற்றொரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் அரிவாள்கள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. பின்னர் காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காரையும், அதில் இருந்த ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த காரில் வந்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story