விழுப்புரத்தில் திருட சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய கொள்ளையன் - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை
விழுப்புரத்தில் திருட சென்ற வீட்டில் கொள்ளையன் ஒருவன், ஊஞ்சல் ஆடி உள்ளான். அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம்,
விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க உட்கோட்ட காவல்துறை சார்பில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வீடுகள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இருந்தபோதிலும் குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் தந்தை பெரியார் நகர், சுதாகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதையடுத்து விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்தவரும், தென்பேர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவருமான இளங்கோ (வயது 56) என்பவர் போலீசார் அறிவுறுத்தலின்படி தனது வீட்டை சுற்றிலும் 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்தார்.
இந்த நிலையில் ஆசிரியர் இளங்கோ நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் டிப்-டாப் உடையணிந்தபடி வந்த கொள்ளையன் ஒருவன், ஆசிரியர் இளங்கோ வீட்டுக்குள் புகுந்தான். பின்னர் அவன், இளங்கோ வீட்டின் 2-வது மாடிக்கு சென்றான். அங்குள்ள அறைக்கு சென்று ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று பார்த்துள்ளான். ஆனால் அங்கு அவனுக்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில் விரக்தியுடன் அறையை விட்டு வெளியே வந்துள்ளான்.
அப்போது அங்குள்ள ஊஞ்சலை பார்த்த அவனுக்கு, ஊஞ்சலில் ஆட ஆசை ஏற்பட்டது. உடனே அவன், அந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடினான்.
பின்னர் அந்த கொள்ளையன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து வீட்டின் முன்புற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோலை திருடிவிட்டு சென்று விட்டான்.
இந்த நிலையில் நேற்று காலை ஆசிரியர் இளங்கோ, தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது டிப்-டாப் வாலிபர் ஒருவர் நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டின் 2-வது மாடிக்கு வந்து அங்குள்ள ஊஞ்சலில் 3 நிமிடம் அமர்ந்து ஆடியுள்ளதும், பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த அவன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோலை திருடிச்சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததோடு, அந்த காட்சிகளை கொண்டு கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட சென்ற வீட்டில் கொள்ளையன் ஒருவன், ஊஞ்சலில் அமர்ந்து ஆனந்தமாக ஆடிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த இடத்தில் கொள்ளையன் ஊஞ்சலில் ஆடிய காட்சி வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story