வீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை: கோர்ட்டில் வாலிபர் சரண்
வீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரையூர் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
சேரன்மாதேவி,
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கோட்டவிளை தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மாரியப்பன் (வயது 30). இவர் சேரன்மாதேவி நூலகம் அருகே பாத்திரக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி மாரியப்பன் வீரவநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, மாரியப்பன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் கோட்டவிளை தெருவில் உள்ள விநாயகர் கோவில் அருகே மாரியப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டனர். அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரியப்பனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாரியப்பனின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். பின்னர் பாளையங்கோட்டையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்த மாரியப்பன் உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மாலை 5 மணி அளவில் சேரன்மாதேவியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சேரன்மாதேவி நூலகம் முதல் ஆற்றுப்பாலம் வரை பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே மாரியப்பன் கொலை தொடர்பாக சேரன்மாதேவி மேலநாலாம் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மாயாண்டி (22) என்பவர் மதுரை மாவட்டம் பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story