அதிராம்பட்டினம் அருகே, நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் சிலைகள்? பொன்.மாணிக்கவேல் ஆய்வு


அதிராம்பட்டினம் அருகே, நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் சிலைகள்? பொன்.மாணிக்கவேல் ஆய்வு
x
தினத்தந்தி 19 Sept 2019 3:45 AM IST (Updated: 19 Sept 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் சிலைகள் உள்ளதா? என்று பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். ஒரத்தநாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வரும் இவர், தனது சொந்த கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இங்கு நேற்று முன்தினம் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சிலையை கைப்பற்றி விசாரித்தனர். உலோகத்தால் ஆன இந்த நடராஜர் சிலை 5 அடி உயரம் இருந்தது.

நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் பல சிலைகள் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகள் சிலைகளை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பகுதியில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிலைகள் இருக்கிறதா? என கண்டறியும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நேற்று நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நடராஜர் சிலையை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், மலைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரசேகரன், முகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி பாஸ்கர், இந்து சமய அறநிலையத்துறை பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் கருணாநிதி, செயல் அதிகாரி சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அந்த பகுதியில் நவீன கருவி மூலம் சோதனை நடத்தி சிலைகள் இருப்பதை கண்டறிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை அதிராம்பட்டினம் அபயவரதேஸ்வரர் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கிராம மக்கள் பலர் நடராஜரை தரிசனம் செய்தனர். 

Next Story