திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல் - நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், அந்த பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சென்னையில் இருந்து ஊருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது, இளம் பெண்ணை மணக்கொல்லை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது.
இதுபற்றி பெண்ணின் உறவினர்கள் ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் சம்பவம் நடந்த இடம் உளுந்தூர்பேட்டை என்பதால் இங்கு வழக்குப்பதிவு செய்ய முடியாது என கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணை கடத்தியதாக கூறப்படும் வாலிபரின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு தரக்கோரி நேற்று காலையில் கொட்டாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர், மண்எண்ணெய் கேன்களை எடுத்துவந்து தீக்குளிக்கப்போவதாக மிரட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story