குடியிருப்புகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: சேரம்பாடி டேன்டீ அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை
குடியிருப்புகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து சேரம்பாடி டேன்டீ அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(டேன்டீ) ரேஞ்சு 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று தேயிலை தோட்ட கழகம் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சேரம்பாடி டேன்டீயில் பணியாற்றி ஓய்வு பெற்ற 80 தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை கண்டித்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நேற்று காலை சேரம்பாடி டேன்டீ கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டேன்டீ பொதுமேலாளர் ஜெயராஜ், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவடிவேலு ஆகியோர் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற தொழிலாளர்களை அரசு குடியிருப்புகளில் இருந்து காலி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பல ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பணி கொடையை வழங்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். டேன்டீயில் பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து டேன்டீ பொதுமேலாளர் ஜெயராஜ் கூறியதாவது:-
டேன்டீ குடியிருப்புகளை பலர் பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். பலர் வாடகைக்கு விட்டுள்ளனர். மழை மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் பணியில் உள்ள தொழிலாளர்களின் வீடுகள் சேதம் அடையும் சமயத்தில் வேறு குடியிருப்புகள் வழங்க முடியாமல் உள்ளது. இதனால் பூட்டி கிடக்கும் மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள குடியிருப்புகளை நோட்டீஸ் வழங்கி உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டு வருகிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ்களுக்கு உரிய விளக்கத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வழங்கினால் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். இது தொடர்பாக நாளை(இன்று) ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தப் படும். இதில் மனுக்கள் அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் எம்.எல்.ஏ. திராவிடமணி கூறும்போது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களை டேன்டீ குடியிருப்புகளில் இருந்து காலி செய்யுமாறு நிர்வாகம் வலியுறுத்த கூடாது. மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை விரைவாக வழங்க வேண்டும். டேன்டீ தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக டேன்டீ நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story