சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி ஒப்பாரி வைத்து பொதுமக்கள் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி ஒப்பாரி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறுகாட்டூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து எய்யலூர் வரையிலான 4 கிலோ மீட்டர் சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த சாலையை சீரமைக்க கடலூர் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதிஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதனால் கிராமத்துக்கு பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரியும், இடிக்கப்பட்ட பாலத்தை விரைந்து கட்டித்தரக்கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சாலை சீரமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 26-ந் தேதி காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story