திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை - ரூ.6 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக ரூ.6 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
மத்திய அரசு சமீபத்தில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம் ஓட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதுபோல் சாலை விதிமீறல்களுக்கு 10 மடங்கு அபராத தொகையை உயர்த்தியது.
இதனை குறைக்க வலியுறுத்தியும், இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் என்ற அமைப்பு நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது. இதில் தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
இதன்படி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:-
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
இதனால் முக்கிய நகரமான திருப்பூரில் இருந்து பின்னலாடை சரக்குகள், பல்லடத்தில் இருந்து கறிக்கோழி, காங்கேயத்தில் இருந்து கொப்பரை உள்ளிட்ட சரக்குகள் திருப்பூரில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்து வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சரக்குகள் அனுப்பிவைக்கப்படாததால் உற்பத்தியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். லாரிகளும் வேலை நிறுத்தத்தின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக திருப்பூர் ரெயில்வே கூட்ஷெட்டில் அதிக எண்ணிக்கையிலான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story