தொழிலாளர் நல அதிகாரி என்று கூறி பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் பணம் பறித்த 2 பேர் கைது


தொழிலாளர் நல அதிகாரி என்று கூறி பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2019 3:30 AM IST (Updated: 20 Sept 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தொழிலாளர் நல அதிகாரி என்று கூறி பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பிச்சம்பாளையம்புதூரை அடுத்த பாரதிநகர் தாயம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). இவர் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் இவருடைய பனியன் நிறுவனத்திற்கு ஒரு சொகுசு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து ஒரு டிப்-டாப் ஆசாமி உள்பட 2 பேர் இறங்கி, பனியன் நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த சண்முகத்திடம் அந்த டிப்-டாப் ஆசாமி தான் தொழிலாளர் நல பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு ஆகியவற்றின் மாநில செயலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பின்னர் அடுத்த மாதம் 10-ந்தேதி கோவை கலையரங்கத்தில் நுகர்வோர் நலன் பற்றியும், பெண் வன்கொடுமைகள் குறித்தும், வெளிமாநில தொழிலாளர்கள் நலன் மற்றும் குழந்தை தொழிலாளர் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதாகவும், அந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் கூறி உள்ளார். எனவே அதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று ஒரு ரசீது புத்தகத்தை கொடுத்து கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சண்முகம், நல்ல காரியத்திற்காகத்தானே கேட்கிறீர்கள் என்று கூறி ரூ.1000-த்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த டிப்-டாப் ஆசாமி ரூ.1000 மட்டும் கொடுக்கிறீர்களே, உங்களது நிறுவனத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் தான் வரவேண்டும். எனவே ரூ.3 ஆயிரம் கொடுங்கள் என்று மிரட்டி பணத்தை பறித்து கொண்டார். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் சந்தேகமடைந்த சண்முகம் அருகில் உள்ள மற்றொரு பனியன் நிறுவன உரிமையாளர் மூர்த்தி என்பவரிடம் இதுபற்றி கூறியபோது, அந்த 2 ஆசாமிகளும் மூர்த்தியையும் மிரட்டி ரூ.1000 பறித்து சென்றதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம், மூர்த்தி ஆகியோர் அந்த 2 பேரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் இருவரும் அவர்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து பொதுமக்கள் விரட்டி சென்று அவர்களை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டிப்டாப் ஆசாமி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த கோவை குமார் என்கிற குமார் (வயது39) என்றும், மற்றொருவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முருகன் (64) என்பதும் தெரியவந்தது. இதில் குமார் கோவை ஆஸ்.எஸ்.புரத்தில் குடும்பத்துடன் தங்கி இருப்பதும், முருகன் கோவை புலியகுளத்தில் வசிப்பதும் தெரிய வந்தது.

குமார் டிப்-டாப் உடை மற்றும் கண்ணாடி அணிந்து சென்று தன்னை தொழிலாளர் நல அதிகாரி என்று கூறி பல்வேறு நிறுவனங்களில் பணம் பறித்ததும், அவருக்கு உதவியாக முருகன் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம், சொகுசு கார் மற்றும் ஏராளமான போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story