ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தென்னம்பாளையம் காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தென்னம்பாளையம் காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் விவசாயிகள் காய்கறிகளுடன் வந்து நேற்று ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி சந்தையை நம்பி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தினமும் இந்த சந்தைக்கு உடுமலை, பல்லடம், காங்கேயம், பொங்கலூர், ஊத்துக்குளி என்பது உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாட்டு சந்தையாக இருந்த அந்த பகுதியை தினசரி காய்கறி சந்தையாக மாற்றி கொடுத்தார்கள். இதற்காக பலரும் போராட்டம் நடத்தி வந்தோம்.
இதன் பின்னர் சிறிய, சிறிய பிரச்சினைகள் வந்தாலும் விவசாயிகள் சுதந்திரமாகவும், எந்த சிரமமும் இன்றியும் காய்கறிகளை விற்பனை செய்து வந்தோம்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் வளர்ச்சி பெறுவது பெருமையே. இருப்பினும் சுதந்திரமாக காய்கறி விற்பனை செய்து வந்த சந்தையை வேறு இடத்தில் கடைகளை கட்டி விவசாயிகளுக்கு விற்பனை செய்ய இடமில்லாமல் சந்தைக்கு ஒதுக்குபுறமாக இடமாற்றம் செய்திருப்பது வேதனையளிக்கிறது.
எனவே காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது. இதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மேற்கூரை வசதி செய்து கொடுக்க வேண்டும். மழை மற்றும் வெயில் காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். சிமெண்டு தரை வசதி போன்றவை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக காய்கறி சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காய்கறி விற்பனை செய்வது போல் காய்கறிகளுடன் அமர்ந்திருந்தனர்.
Related Tags :
Next Story