பள்ளிப்பட்டு அருகே சாலையில் வேருடன் சரிந்து விழுந்த ஆலமரம் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பள்ளிப்பட்டு அருகே சாலையில் வேருடன் சரிந்து விழுந்த ஆலமரம் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே சாலையில் வேருடன் ஆலமரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை 6.20 மணியளவில் பள்ளிப்பட்டு அருகே உள்ள பெருமாநெல்லூர் கிராமத்தில் நின்ற பழமையான ஆலமரம் வேருடன் சரிந்து சாலையில் விழுந்தது. இந்த மரம் சரிந்து விழுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் அந்த வழியாக தனியார் பஸ் கடந்து சென்றது.

பயங்கர சத்தத்துடன் ஆலமரம் சாலையில் விழுந்ததும் திடுக்கிட்ட டிரைவர் பஸ்சை சற்று தொலைவில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி சாலையில் விழுந்த ஆலமரத்தை பயத்துடன் பார்த்தனர். நல்ல வேளையாக பெரும் விபத்தில் இருந்து பஸ் பயணிகள் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சாலையில் வேருடன் சரிந்து விழுந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். இதனால் அந்த வழித்தடத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள்.

Next Story