மாவட்ட செய்திகள்

சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம் + "||" + Heavy rains pouring in Chennai suburbs Car, scooter burnt down in ruins

சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்

சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்
சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழையால் ஆவடி-பூந்தமல்லி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசமானது.
ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 3-வது பிரதான சாலையில் ஏ.சி. சர்வீஸ் கடை நடத்தி வருபவர் உதயகுமார் (வயது 35). இவர், தனது கடையின் முன்பு கார் மற்றும் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். பலத்த காற்றின் காரணமாக அங்குள்ள மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீப்பொறிகள் அங்கு நிறுத்தி இருந்த கார் மற்றும் ஸ்கூட்டரில் விழுந்து இரண்டும் தீப்பிடித்து எரிந்தது.


இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் மற்றும் ஸ்கூட்டர் இரண்டும் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மின்கம்பம் சாய்ந்தது

மடிப்பாக்கம் பாலையா கார்டன் கல்யாண கந்தசாமி தெருவில் இருந்த ஒரு மரம் திடீரென வேரோடு சாய்ந்து, மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்ததுடன், மின்கம்பமும் உடைந்து விழுந்தது.

இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. உடனடியாக சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டல அதிகாரிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியதுடன், மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மரங்கள் முறிந்து விழுந்தன

திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சாலையோரங்களில் இருந்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பு அருகே கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் வாகனங்கள் ஏதும் சொல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியதால் மீண்டும் போக்குவரத்து சீரானது.

மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று திடீரென பாதியாக முறிந்த நிலையில் அபாயகரமாக தொங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் இனியன் தலைமையிலான பணியாளர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

சுவர் இடிந்து விழுந்தது

அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் பின்பகுதி உள்ள சுற்றுச்சுவர் பலத்த மழையின் காரணமாக நேற்று அதிகாலை திடீரென இடிந்து, அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில் டிரான்ஸ்பார்மரும் சரிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது.

இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர்களும், நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அதிர்ச்சியில் அலறியடித்து வெளியே ஓடினர். ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் அண்ணாநகர் போலீசார் விரைந்துவந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை டாக்டர்கள் உதவியுடன் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் இடிபாடுகளை அகற்றி, சாய்ந்து விழுந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆவடி சி.டி.எச். சாலை உள்பட பல இடங்களில் சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. அங்கு நிறுத்தி இருந்த கார் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் மூழ்கின.

தொடர்ந்து மழை பெய்ததால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் பருத்திபட்டு ஏரியில் இருந்து வெளியேறிய மழைநீர் ஆவடி-பூந்தமல்லி சாலைகளில் கரைபுரண்டு ஓடியது. இதனால் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கால்வாயில் விழுந்த மின்சாரபெட்டி

தண்டையார்பேட்டை நேதாஜி நகர், 4-வது தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டி கால்வாயில் தேங்கி இருந்த மழைநீரில் சரிந்து விழுந்தது.

நல்லவேளையாக மழை காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கால்வாயில் விழுந்து கிடந்த மின்சார இணைப்பு பெட்டியை சீரமைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நொய்யல் அருகே கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து நாசம்
நொய்யல் அருகே கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து நாசமானது.
2. பேரூர் பகுதியில் பலத்த மழை, 500 ஏக்கர் வெங்காயப்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் சோகம்
பேரூர் பகுதியில் பெய்த மழையில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த 500 ஏக்கர் வெங்காயப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
3. திருவிடைமருதூர் அருகே தீயில் கருகி பசுமாடு சாவு உழவு எந்திரம்-குழாய்கள் எரிந்து நாசம்
திருவிடைமருதூர் அருகே தீயில் கருகி பசுமாடு பரிதாபமாக இறந்தது. உழவு எந்திரம் மற்றும் குழாய்கள் எரிந்து நாசமாயின.
4. கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூடத்தில் மேலும் 36 பேரல் ரப்பர் பால் நாசம்
கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூடத்தில் இருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மேலும் 36 பேரல் ரப்பர் பால் காலாவதியாகி நாசமானதாக திரும்ப வந்தது.
5. மயிலாடுதுறையில் தீ விபத்து: 7 வீடுகள் - ஓட்டல் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மயிலாடுதுறையில் தீ விபத்தில் 7 வீடுகள் மற்றும் ஓட்டல் எரிந்து நாசமாகின. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.