கிண்டியில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை பிணத்தை கால்வாயில் வீசிச்சென்றவர்களுக்கு வலைவீச்சு


கிண்டியில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை பிணத்தை கால்வாயில் வீசிச்சென்றவர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 20 Sept 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

கிண்டியில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பிணத்தை கால்வாயில் வீசிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி ரெயில் நிலைய தண்டவாளம் அருகே உள்ள மழைநீர் கால்வாயில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ரெயில்வே போலீசார் சென்று பார்த்தபோது தலை, முதுகு, கை, கால் பகுதிகளில் காயங்கள் இருந்தன. எனவே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் கிண்டி போலீசாருக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் பகலவன், கிண்டி உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் விரைந்து சென்று பார்த்தனர். மர்மநபர்கள் அடித்து கொன்றுவிட்டு உடலை ரெயில்வே கால்வாயில் போட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவர்

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்தனர். இதற்கிடையே ஆட்டோ ஒன்று கிண்டி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்ற நிலையில் நின்றுகொண்டு இருந்தது.

விசாரணையில் அந்த ஆட்டோ சென்னை சூளைமேட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூளைமேடு போலீசில் விசாரித்தபோது ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வத்தை கடந்த 18-ந் தேதியில் இருந்து காணவில்லை என்று அவரது மனைவி சூளைமேடு போலீசில் புகார் செய்திருப்பது தெரியவந்தது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது. இதனை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து பன்னீர்செல்வத்தை கொலை செய்து பிணத்தை கால்வாயில் வீசி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story