பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் - போலீஸ் கமிஷனர் உத்தரவு
பெண்ணை தாக்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் செந்தில் உத்தரவிட்டார்.
சேலம்,
சேலம் வீராணம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் (வயது 50). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்களை தாக்கியதாக அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். அதன்பேரில் அன்னதானபட்டியில் இருந்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு அவர் பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.
இதைத்தொடர்ந்து வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னதானப்பட்டிக்கு சென்று ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட பெண்ணை தாக்கியதாகவும், இதை தட்டி கேட்ட அவரது கணவர் மற்றும் உறவினர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அறிக்கையை அன்னதானப்பட்டி போலீசார், போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் வீராணம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை பணி இடைநீக்கம் செய்து, போலீஸ் கமிஷனர் செந்தில் உத்தரவிட்டு உள்ளார்.
பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாநகர போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story