அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2019 3:45 AM IST (Updated: 20 Sept 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை பற்றி விமர்சனம் செய்து பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும், மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் சேலத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, ஷேக் இமாம், பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆக்ஸ்போர்டு ராமநாதன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர் சாந்தமூர்த்தி, மகளிர் அணி நிர்வாகி சாரதாதேவி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், சோனியா மற்றும் ராகுல்காந்தியை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அதற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்து, ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என கேள்வி கேட்டு அவரை கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. அதேசமயம், அமைச்சரின் படத்தை போலீசார் கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.

முன்னதாக மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபகாலமாக தரம் தாழ்ந்த நிலையிலும், நாகரீகமற்ற முறையிலும் காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சனம் செய்து வருவது கண்டனத்திற்கு உரியது. அதேபோல், இந்தி மொழி திணிப்பு பற்றி பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் ஒருபோதும் இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டோம், என்றார்.

Next Story