சிங்கம்புணரியில் தற்காலிக நீதிமன்றம் - நீதிபதி ஆய்வு
சிங்கம்புணரியில் தற்காலிக நீதிமன்றம் அமைக்க மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து சிங்கம்புணரி தனி வட்டமாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தநிலையில் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட நகர மண்டபத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்காலிக வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த அலுவலகத்திற்கு தனி கட்டிடம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் புதிய கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிங்கம்புணரி தாலுகாவிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க தற்காலிக இடம் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட நகர மண்டபத்தில் தேர்வு செய்யப்பட்டது.
அந்த இடத்தை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு தற்காலிக நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சாமுண்டீஸ்வரி பிரபா, திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுந்தரமகாலிங்கம், பொறியாளர்கள் செல்லையா, கண்ணன், செயல் அலுவலர்கள், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story