வாணாபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


வாணாபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2019 10:15 PM GMT (Updated: 19 Sep 2019 10:28 PM GMT)

வாணாபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் தச்சம்பட்டு சாலையில் அரசு பெண்கள் விடுதி, கோவில் தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமான மழைநீர் தெருக்கள் முழுவதும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்தமழையின் காரணமாக அரசு பெண்கள் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம் போன்று தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என்று வாணாபுரம் பஸ் நிலையம் அருகில் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் திடீரென 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

காலை சுமார் 7.45 மணியளவில் தொடங்கிய மறியல் 9 மணி வரை தொடர்ந்ததால் அங்கு பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழை நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வெளியே செல்லவில்லை. தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும். தண்ணீரை உடனே அகற்ற கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story